×

வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடற்பருமன்!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

மனித உடலின் நான்கு அடிப்படை திரவங்கள் (ரத்தம், மஞ்சள் பித்த நீர், கறுப்புப் பித்த நீர், சளி) குறித்து விளக்கும் நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்டஸ், தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் உணவு, இந்த உயிர்த் திரவங்களையும் அதிகமாக்கிவிடுகிறது. இவற்றைச் சமன் செய்வதற்கு உடற்பயிற்சி ஏதும் செய்யவில்லையெனில், நோய்கள் ஏற்படும் என்கிறார். ஒரு மனிதன் தனது சராசரி எடையைவிட அதிகமாக இருந்தால், அது அவரது உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கையையேக் காட்டுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

உடற்பருமன் கணக்கீடு

மக்களுக்கு ஏற்படும் சில நோய்களுக்கும், அவர்களின் உடல் எடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்ற நோக்கத்தில், லம்பெர்ட் அடால்ப் ஜாக்குஸ் க்யூலெட் என்றவர் கண்டறிந்ததுதான் BMI முறை. ஒருவரின் உடல் எடையை, அவரின் உயரத்தின் இருமடங்கால் வகுத்து விடைகாண வேண்டும் (BMI = Kg/m2) அந்த விடை 18லிருந்து 25க்குள் இருந்தால் சரியான உடல் எடை எனவும், 27க்கு அதிகமானால் உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு சார்ந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும், 30 க்கும் அதிகமானால், இன்னும் சில நோய்களும் வரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடற்பருமன்

ஐக்கிய நாடுகளால் 2016ல் உருவாக்கப்பட்ட, வளர்ச்சிக்கானக் குறிக்கோள்களின் (Sustainable Deelopmental Goals) வரையறையில், உயர்ந்துவரும் உடற்பருமன் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி, 135 மில்லியன் நடுத்தர வயதினரும், 5 வயதிற்குட்பட்ட 39 மில்லியன் குழந்தைகளும் உடற்பருமனுடன் இருக்கிறார்கள். மேலும், World Obesity Federation என்ற அமைப்பின் “The Obesity Atlas 2023”என்ற திட்டத்தின் ஆய்வு முடிவுகள், வரும் 2035 ஆம் ஆண்டிற்குள் நடுத்தர வயதினரின் உடற்பருமன் எண்ணிக்கை 5.2 சதவிகிதம் அதிகரிக்கும் நிலையில், குழந்தைகள் உடற்பருமன் எண்ணிக்கையானது, 9.1 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கைக் கொடுத்துள்ளது.

உடற்பருமன் அதிகரிப்பதற்கான காரணிகள்

வளரிளம் பருவத்தினரிடையே உடற்பருமன் அதிகரிப்பதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள்:

(i) மரபியல் காரணிகள் – ஒரு பெண் அல்லது ஆண் குழந்தையின் குடும்பப் பின்னணியுடன் இணைந்த மரபியல் காரணிகள் அல்லது பிறவியில் ஏற்படும் மரபியல் காரணிகளால் உடல் எடை அதிகரிப்பு நிகழ்வது இயல்புதான். இருப்பினும் இது வெறும் 5 சதவிகிதம்தான் என்பதால், தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே சென்று கொண்டிருக்கும் வளரிளம் பருவத்தினரின் உடற்பருமன் எண்ணிக்கைக்கு, பிறகுநான்கு காரணிகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

(ii) எடுத்துக்கொள்ளும் உணவின் அளவும் தரமும் – உணவைப் பொருத்தமட்டில், அதிக சர்க்கரை, கொழுப்பு, உப்பு மற்றும் சேர்மானங்கள் சேர்த்த உணவுகள் வளரிளம்பருவ வயதினரால் விரும்பி உண்ணப்படுவதும் உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. அதிக கலோரி உணவுகள் மட்டுமல்லாது, குறைவான ஊட்டச்சத்துக்களுடன் இருக்கும் துரிதவகை உணவுகளை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடும்போது, அதிக அளவில் உட்கொள்ளுவதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

(iii) பெற்றோரின் கவனிப்பு – தங்களுடைய குழந்தையின் சமச்சீரான உடல் ஆரோக்கியத்தைத் தெரிவிக்கும் உயரம், உடல் உடை போன்றவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, குறைபாடு ஏற்படும் நிலையில், உடனடியாக அதைக் களையும் செயல்பாட்டில் இறங்குவதே நல்ல பெற்றோருக்கு அழகு. ஆனால், பெற்றோர்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 62 சதவிகித பெற்றோர், உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளை வைத்திருப்பதாகவும், ஆனால் அது குறித்து அவர்கள் அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.

(iv) உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை – சிறு குழந்தைகளாக இருந்தபோது மேற்கொண்ட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள், பருவமடைந்தபிறகு தொடர்வதில்லை. இதனால், சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் கலோரியே எரிக்கப்படாமல் உடலில் சேருவதுடன், அதிகக் கலோரி உணவுகளால் கூடுதலாகக் கிடைப்பவையும் உடலில் சேமித்து வைக்கப்படுவதால் உடற்பருமன் ஏற்படுகிறது. வளரிளம் பருவத்தினர் தொடர்பான ஆய்விதழ் வெளியிட்டுள்ள தரவுகளும், வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம்ஸ் போன்ற செயல்பாடுகளுக்கும் பருவவயதினரின் உடற்பருமன் அதிகரிப்புக்கும் மிக நெருங்கியத் தொடர்பு இருப்பதையும், உடற்பருமன் ஏற்படுவதற்கு இவையும் காரணம் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

(v) பொருளாதாரம் உள்ளிளட்ட பிற சூழ்நிலைகள் – பருவ வயதினர் வசிக்கும் இடம், போக்குவரத்து வசதி, உணவு கிடைக்கும் வாய்ப்புகள், எந்தவொரு மகிழ்ச்சியையும் துரித உணவு அல்லது விருந்துணவுடன் கொண்டாடும் மனநிலை, மேம்பட்ட பொருளாதார வசதிகள் போன்றவையும் அவர்களின் எடையை நிர்ணயிப்பதாக உள்ளது.

உடற்பருமனால் என்னென்ன உடல்நலக்கேடுகள் ஏற்படும்?

பள்ளிப் பருவம் மற்றும் வளரிளம் பருவம் என்ற இரண்டு நிலையிலும்; அதிகரிக்கும் உடற்பருமனானது, அவர்களுடைய மேற்படிப்பு, பணி, திருமணம், குழந்தைப்பேறு என்று எதிர்காலத்திலும் அவர்களுக்கு பிரச்னைகளைக் கொடுக்கவல்லது. மிகக் குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் நிலை நீரிழிவு, தூக்கமின்மை, சுவாசமண்டல பிரச்னைகள் போன்றவற்றை நடுத்தர வயதிலேயே சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது மட்டுமல்லாமல், அதிக உடற்பருமனால், உடல் எடையைத் தாங்க முடியாததாலும், உடலுக்குத் தேவையான நுண்சத்துகள் சரியாகக் கிடைக்காமல் குறைபாடு ஏற்படுவதாலும், மூட்டுத்தேய்மானம், எலும்பு மட்டும் தசைகளில் அடிக்கடி வலி ஏற்படுதல், உடலியங்கியல் நிகழ்வுகள் பாதிப்படைந்து, பித்தப்பை, சிறுநீரக பிரச்னைகள் போன்றவையும் ஏற்படலாம்.

உளவியல் சார்ந்த பிரச்னைகள்

உடல் ரீதியான பிரச்னைகள் பல இருக்கும் நிலையில், பருவவயதில் உடற்பருமன் இருக்கும் பெண் குழந்தைகள் அல்லது ஆண் குழந்தைகள் இருபாலருக்கும், உளவியல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கிறது. ஒத்த வயதுடையவர்கள் சரியான உடல் எடை இருப்பதைப் பார்த்து, உடற்பருமன் உள்ள குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை, அதன்வாயிலாக சிறிது சிறிதாக அதிகரிக்கும் கவலை, பயம், எதிலும் விருப்பமின்மை, உணவை மறுத்தல், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளுதல், மன அழுத்தம் என்று முழு பாதிப்படைவதும் நிகழ்கிறது என்று வளரிளம்பருவ வயது ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வளரிளம் பருவ வயதினரின் உடற்பருமனைக் குறைப்பதற்குத் தேவையான செயல்பாடுகள்

1. ஒவ்வொரு பள்ளியிலும், குழந்தைகளின் சராசரி உடல் எடை, உயரம் போன்றவை அவர்களின் வயதுக்கேற்றவாறு இருக்கிறதா என்று நலம் சார்ந்த அமைப்புகள் துவங்கி பரிசோதிக்க வேண்டும். (அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அவ்வாறு இல்லாத நிலையில், பெற்றோருக்குத் தெரியப்படுத்தி, தேவையான மருத்துவ மற்றும் உணவுமுறை ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

2. பள்ளி மற்றும் கல்லூரிகளில், தினந்தோறும் குறைந்தபட்சம் 60 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி கட்டாயம் என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும். பருவவயதினர், அவர்களுடைய நண்பர்களுடன் இணைந்து விளையாடும்போது, புத்துணர்ச்சி பெறுவதுடன், அதிகப்படியான கலோரியும் உடல் இயக்கத்திற்காக எரிக்கப்பட்டு உடல் எடை சீராக இருக்கும்.

3. சிறு குழந்தைகள் மற்றும் பருவவயதினரைக் குறிவைத்து ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மற்றும் உணவுகளின்; உண்மைத் தன்மையை ஆராய்ந்து, போலி உணவுகள், உடை எடையை அதிகரிக்கும் அதிகக் கலோரி, சர்க்கரை, உப்பு, வேதிப்பொருட்கள் சேர்த்த உணவுகள், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை மத்திய மற்றும் மாநில உணவுப் பாதுகாப்பு நிறுவனங்கள் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்படுத்த வேண்டும்.

4. உணவின் மீது வெறுப்பு கொண்டு உடல் நலனைக் கெடுத்துக்கொள்ளும் சிக்கல்களாகக் கருதப்படும் Anorexia Nervosa, Binge eating disorder (அதிக உணவு சாப்பிடுவது) ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் தொற்றாநோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், முறையான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

5. பருவ வயதினர் எவ்வாறு சாப்பிட வேண்டும்? காலை உணவின் அவசியம், அவர்களுக்குத் தேவையான பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் இருக்கின்றன, அவற்றை உண்பதால் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள், உடற்பருமனால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை அதற்கென்று தனியாக சிறப்புப் பாடவேளை அமைத்துத் தெரியப்படுத்த வேண்டும்.

உடற்பருமன் இருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டியவை

வளரிளம் பருவத்தில் உடல் எடை சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்வதுதான் முதலில் செய்ய வேண்டிய செயல். ஒருவேளை அதிகரிக்கும் நிலையில் அல்லது உடற்பருமன் ஏற்பட்ட நிலையில், எடையைக் குறைப்பதற்கான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடற்பருமனை அல்லது அதிக உடல் எடையைக் குறைப்பதற்கு மருத்துவசிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என்றெண்ணி, முறையற்ற மருத்துவம் மற்றும் போலி மருத்துவம் போன்றவற்றை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது தவிர்க்கப்படவேண்டும்.

முறையான உணவுப் பழக்கம், இடைவேளை விட்டு உண்பது, சரியான நேரத்தில் உண்பது, ஒரு பங்கு முழு தானிய உணவும், அதற்கு இரண்டு மடங்கு காய்கள், கீரைகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக்கொள்வது, அளவான- தரமான கொழுப்புணவு, புரதச் சத்திற்கு மீன், முட்டை, பால், பருப்பு போன்ற சரிவிகித உணவுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (ICMR) பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், தொடர்ச்சியான அசைவ உணவு, துரித உணவு, அதிகக் கலோரி, சர்க்கரை, கொழுப்பு இருக்கும் உணவுகள், பேக்கர் உணவுகத்தீனிள், சிப்ஸ் போன்ற நொறுக்குகள், சாக்லேட் உள்ளிட்ட பிற இனிப்புகள், ரெடிமேட் குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு வகைகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். உடலை எப்போதும் இயக்க நிலையிலேயே வைத்திருப்பது, நிம்மதியான தூக்கம், மது, புகைப்பழக்கம் தவிர்ப்பது, ஆரோக்கியமான மனநிலையுடன் இருக்கும் வகையில் பருவவயதினரின் சூழலையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொடுக்க வேண்டும்.

The post வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடற்பருமன்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Dietician ,Vandarkuzhali ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!